புரதம் மற்றும் டிஎன்ஏ போன்ற உயிரியல் மூலக்கூறுகளில் நைட்ரஜன் ஒரு இன்றியமையாத சேர்மம் ஆகும். அது நைட்ரேட் எனும் கூட்டுப்பொருள் வடிவில்தான் உயிரிகளுக்கு பயன்படும். காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜனை சில நுண்உயிரிகள் பிரித்து தாவரங்களுக்கு அளிக்கின்றன. வேதியியலாளர்களும் அதை போலவே நைட்ரஜனிலிருந்து உரங்களை உண்டாக்குகின்றனர்.ஆனால் உயிர்கள் தோன்றுவதற்குமுன் உயிரியலுக்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் நைட்ரேட் உண்டாவதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இன்று துருக்கி,பெரு ஆகிய நாடுகள் இருக்கும் பகுதியில் ராட்சச எரிமலை வெடிப்புகள் உண்டாகி இலட்சக்கணக்கான டன் நைட்ரேட்டை கொட்டின என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பூமியின் தொடக்க கால வரலாற்றில் உயிர் தோன்றுவதற்கு காரணமான சில மூலக்கூறுகளை எரிமலைகள் அளித்திருக்கலாம் என்கிற கருத்திற்கு இது வலு சேர்க்கிறது என்கிறார் பாரிஸிலுள்ள சார்பான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எரிமலையியலாளர் இர்வான் மார்ட்டின். அந்த நைட்ரேட் சத்து எரிமலை மின்னல்களிலிருந்து உண்டாகியிருக்கலாம். எரிமலைப் பிழம்புகளிலுள்ள தூசுகள் நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் உரசி மிகப்பெரும் மின்னேற்றத்தை உண்டுபண்ணுகின்றன. இதன் மூலம் நைட்ரஜன் அணு நிலைக்கு மாறி ஆக்சிஜனுடன் வினை புரிந்து நைட்ரஜன் ஆக்சைடாகவும் பின் நைட்ரேட்டாகவும் உண்டாகியிருக்கலாம். துருக்கியில் பெருவிலும் உள்ள பாறைகளை ஆய்வு செய்ததில், 20 மில்லியன் வருடங்களுக்கும் 1 மில்லியன் வருடங்களுக்கும் இடையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளினால் உண்டான நைட்ரேட் காணப்பட்டது.மேலும் அவற்றில் உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எடை காற்றுமண்டலத்திலுள்ள ஓசோன் மூலக்கூறுகளை ஒத்திருந்தன. ஆகவே நைட்ரேட் உப்பு தரைப்பகுதியில் உருவாகாமல் காற்று மண்டலத்திலேயே உருவாயின என்பதைக் இது காட்டுகிறது. ஆனால் மார்ட்டின் குழுவினர் ஆய்வு செய்த எரிமலை வெடிப்புகளுக்கு வெகு காலம் முன்னே-ஏறத்தாழ 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில் உயிர்கள் தோன்றிவிட்டன. பூமியின் தொடக்க காலம் பெரும் எரிமலை வெடிப்புகள் நிறைந்தது. கண்டங்கள் தோன்றுவதற்கு முன்னரே எரிமலை தீவுகள் மீது தாக்கிய மின்னல்கள் உயிர் தோன்றுவதில் ஒரு பங்காற்றியிருக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நைட்ரேட் படிவங்களைப்போல இளம் பூமியின் எரிமலை தீவுகளில் நைட்ரேட் உண்டாகியிருக்கலாம். அந்த தீவுகள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்கிறார் மார்ட்டின்.